‛செப்., 1-ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்,'' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நியூ இந்தியா அஷுரன்ஸ் நிறுவனம் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார்.
நீதிபதி கூறுகையில், ‛‛புதிய வாகனத்தை வாங்கும் போது ,மக்களுக்கு, காப்பீடு நடைமுறைகள் முழுமையாக தெரிவதில்லை. வாகனங்கள் வாங்குபவர்களுக்கு விற்பனையாளர்களும் காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையான தெரிவிப்பதில்லை,'' என்றார். மேலும், வரும் செப்.,1-ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் ‛பம்பர் டூ பம்பர்' என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
0 Comments